அறிவகம் புதிய இணையதளம்

Showing posts with label காலசக்கரம். Show all posts
Showing posts with label காலசக்கரம். Show all posts

Saturday, July 20, 2019

காலமரணம் - Time Travel END

மரணம் ஏன் ஏற்படுகிறது? கொலை, தற்கொலை இந்த 2 காரணங்களால் தான் மரணம் ஏற்படுகிறது. கொலை செய்யப்படா விட்டால் நிச்சயமாக நாம் மரணத்தை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. 

தொடர்ந்து படிக்க : காலமரணம் - Time Travel END

Wednesday, July 17, 2019

கடவுள் யார்? - Time Travel 9

கடவுள் யார்? இயேசு கிறிஸ்துவா?, அல்லாவா?, சிவபெருமானா?, ராமரா? சூரியனா? அல்லது வேறு யாருமா? இது தான் உலகில் மிகப்பெரிய கேள்வி!


கடவுளே இல்லை என்பதை அறிவியலால் நிரூபிக்க முடியவில்லை. கடவுள் இருக்கிறார் என்பதையும் சித்தர்களால் நிரூபிக்க முடியவில்லை. காலசூழலுக்கு தகுந்தால் போல கடவுள் இருக்கிறார்/இல்லை என்று நாம் கடந்து விடுகிறோம்.

வாழ்நாள் முழுவதும் கடவுள் இருக்கிறார் என்று வாழ்ந்த மனிதனும் இல்லை. கடவுளே இல்லை என்று வாழ்ந்த மனிதனும் இல்லை.

சரி யார் தான் அந்த கடவுள்?

கேள்வியை விட பதில் மிக எளிமையானது. மரணத்தை வென்றவர் கடவுள்! மரணம் என்ற அளவுகோல் தான் கடவுளையும் மனிதனையும் பிரிக்கிறது.

சிவபெருமான் சகாவரம் பெற்றவர் என்றால் அந்த சிவபெருமான் இப்போது எங்கே போனார்? இதே எதார்த்த கேள்வி இயேசுவுக்கும், அல்லாவுக்கும், ராமருக்கும் பொருந்தும். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தார் என்றால் ஏன் இப்போது அவர் உயிரோடு இல்லை?, பரலோகத்தில் இருக்கிறார். கிரேத யுகத்தில் வருவார் என்ற கற்பனை கதைகள் எல்லாம் அறிவியலுக்கு எடுபடாது.

மரணம் இல்லாத ஒரு மனிதன் இருக்கிறார் என்றால் கண்ணை மூடி நம்பலாம் அவர்தான் கடவுள் என்று. அவர் இயேசுவாக வந்தாலும் சரி, ராமராக வந்தாலும் சரி, வேற்றுகிரக வாசியாக வந்தாலும் சரி.

மரணத்தை வென்றவர் தான் கடவுள். நானோ, நீங்களோ மரணத்தை வென்றாலும் நாம் கடவுள் தான்.

மரணம் என்ற ஒன்று இல்லை எனில் மனிதனுக்கு கடவுள் தேவை இல்லை. உங்களுக்கு மரணமே இல்லை என்றால் நீங்கள் யாருக்கு பயப்பட வேண்டும்? எதையும் சாதிக்க உங்களால் முடியும் போது நீங்கள் தானே கடவுள்!

சரி காலப்பயணம் விடயத்திற்குள் வருவோம்

9 கட்டுரைகளில் காலப்பயணம் குறித்து பேசிவிட்டோம். அடுத்து 10வது இறுதி கட்டுரை. அதில் ஒரு தீர்க்கமான பதிலை நான் தந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் நேரத்தை வீணடித்த குற்றத்திற்கு ஆளாவேன்.

இங்கே உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன்

பத்தாவது கட்டுரையில் நான் எதை நிரூபிக்க வேண்டும்?

1.காலப்பயணத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும்!
2.மரணத்தை வென்று காட்ட வேண்டும்!

இந்த 2ல் ஒன்றை 10வது இறுதி கட்டுரையில் ஆராய்வோம். ஆனால் 2ல் எது என்பதை வாசகர்களாகிய நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டும் வேண்டும் என மழலைவாதம் செய்யக் கூடாது. ஏனென்றால் காலப்பயணமும், மரணம் இல்லாத வாழ்வும் நேர் எதிர்எதிர் ஆனவை.  இரண்டையும் ஒரே நேரத்தில் பெற முடியாது.

1.நீங்கள் காலப் பயணத்தை தேர்வு செய்தால் இறந்த காலத்திற்கு செல்லலாம், எதிர்காலத்திற்கும் செல்லலாம். ஆனால் மரணம் நிச்சயம். 

2.மரணம் இல்லாத வாழ்வை தேர்ந்தெடுத்தால் இறந்தகாலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ செல்ல முடியாது. ஆனால் மரணம் இல்லாத வாழ்வு வாழலாம். 


இரண்டில் எது வேண்டும் உங்களுக்கு?

அதிக வாசகர்கள் தேர்வு செய்யும் விடயத்தை 10வது இறுதி கட்டுரையாக முடிக்கிறேன். 

அறிவுப் பயணம் தொடரும்....

முந்தைய கட்டுரைகளை படிக்கwww.arivakam.org

Saturday, July 13, 2019

மனிதன் எப்படி வந்தான்? - time travel 7

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நாம் எதார்த்தமாக சொல்வோம். குரங்கு வகையில் மனிதன் ஒரு உயிரினம் என சார்லஸ் டார்வீனின் பரிணாம கோட்பாடு சொல்கிறது.
காலம், பரிமாணம் குறித்து சென்ற பகுதியில் பார்த்தோம். இங்கு பரிணாமம் குறித்து பார்க்கப் போகிறோம்.

உலகில் முதல் முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினம். ஒரு செல் உயிரினம் பல செல் உயிரினமாகி, மனிதன் வரை பரிணாமம் அடைந்திருக்கிறது என்கிறது அறிவியல். பரிணாமம் என்றால் மேம்பாடு என்று பொருள்.

முதன் முதலில் இந்த உலகில் தோன்றிய உயிரினம் புல் பூண்டு என்ற தாவரங்கள், அடுத்து நத்தை, புழு போன்ற ஊர்வன உயிரினங்கள், அடுத்து வண்டு, பூச்சிகள், அடுத்து பறவைகள், அடுத்து விலங்குகள், பின்னர் மனிதன். என சித்தர்கள் உயிரின பரிணாமத்தை விளக்குகிறார்கள். தாவரம், புழுக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதன். இந்த ஆறு அடுக்குகளை ஆறு அறிவாக சித்தரிக்கிறார்கள் சித்தர்கள்.

ஒரு அறிவு உயிரினம் தாவரம், இரண்டு அறிவு உயிரினம் புழுக்கள், மூன்று அறிவு உயிரினம் பூச்சிகள், நான்கு அறிவு உயிரினம் பறவைகள், ஐந்து அறிவு உயிரினம் விலங்குகள், ஆறு அறிவு உயிரினம் மனிதன்.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் இந்த அறிவியல் கோட்பாட்டை வகுத்துள்ளனர். இதில் தொல்காப்பியம் ஒன்று தான் நமக்கு ஆதாரமாக கிடைத்துள்ளது. தொல்காப்பியத்தில் மட்டுமே ஆறு அறிவு பரிணாம கோட்பாடு விவரிக்கப்பட்டு உள்ளது. இது தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. உலகின் வேறு எந்த பழமையான இலக்கியங்களிலும் பரிணாம கோட்பாடுகள் இல்லை. எல்லாம் கடவுள் படைத்தார் என்ற ஒற்றை வரியில் முடித்துக் கொள்கின்றன. 

அறிவியல் வளர்ந்த இந்த 21ம் நூற்றாண்டில் பரிணாமத்தின் ஆணிவேராய் தொல்காப்பியம் இருப்பதில் தமிழர்களாக நமக்கு கூடுதல் பெருமை.

சரி அறிவியலுக்கு வருவோம்.

பரிணாமம் குறித்து அறிவியல் இன்று வரை ஒரு முழுமையான கோட்பாட்டை தரவில்லை. சார்லஸ் டார்வீன் பரிணாம கோட்பாடுகள் ஓரளவு ஏற்றுக்கொள்ளப் படுகிறது. அதுவும் உயிர் தோற்றம் பற்றி எதுவும் குறிப்பதில்லை. உயிர் மேம்பாடு பற்றி மட்டுமே விவரிக்கிறது. அந்த விவரிப்பில் தான் மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்கலாம் என்ற கருத்து பிரபலமானது.

கால சூழலை வெல்ல உயிரினங்கள் கடுமையாக போராடுகின்றன. அதற்காக தங்கள் உடலை நீட்சிக்கவோ, குறுக்கிக்கொள்ளவோ முயல்கின்றன. அந்த முயற்சியில் வெல்லும் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்கின்றன என்கிறது அறிவியலின் பரிணாம கோட்பாடு.

இன்று நாம் காணும் தாவரங்கள், விலங்குகள், எல்லாம் பரிணாம போட்டியில் வெற்றி பெற்ற உயிரினங்கள். பரிணாமத்தின் உச்சம் மனிதன் என்கிறது அறிவியல்.

உயிர்வாழ காலசூழலை எதிர்த்து பரிணாமம் அடையும் உயிரினங்களால், ஏன் காலத்தை வெல்ல முடியவில்லை என்பது தான் உச்சகட்ட கேள்வி! உயிர்வாழ உடலை பரிணாமப் படுத்திக்கொள்ளும் உயிரினங்கள் உயிரை நிலைநிறுத்த ஏன் முயற்சிக்கவில்லை? எளிமையாக சொன்னால் மரணத்தை ஏன் வெல்ல முடியவில்லை? 

சூழலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற உயிரினங்களால், காலத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை? பரிணாமத்தின் உச்சம் மனிதனால் முடியாவிட்டால் பரவாயில்லை. காலத்தை வெற்றி கொண்ட வேறு உயிரினங்கள் எதாவது இந்த பிரபஞ்சத்தில் உள்ளனவா?

இந்த கேள்விக்கான விடையை சித்தர்கள் தேடினார்கள். ஆம் மரணத்தை வென்ற கடவுள் இருக்கிறார் என் புரிதலுடன்.

அறிவியல் இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறது ஏலியன்ஸ், வேற்று கிரகவாசிகள் என்ற புதிருடன்...

அறிவுப் பயணம் தொடரும்...

முந்தைய கட்டுரைகளை படிக்க : www.arivakam.org

Friday, July 5, 2019

முப்பரிமாணம் என்பது என்ன? - Time Travel 6

காலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம்.

சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்தோம். இந்த பதிவில் பரிமாணம் குறித்து பார்ப்போம்.

பொதுவாக நமக்கு முப்பரிமாணம் தான் தெரியும். முப்பரிமாணம் குறித்து 6ம் வகுப்பில் படித்திருப்போம். மூன்று கண்ணாடிக்குள் கலர்கலர் வளையல்களை போட்டு முப்பரிமாண சோதனை செய்து பார்த்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும்.

உலகிலேயே 2வது சுவையான குடிநீர் சிறுவாணி தண்ணீர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் முதல் சுவையான குடிநீர் எது என கேட்டால், யாருக்கும் தெரியாது. அதுபோலத்தான். முப்பரிமாணம் எல்லொருக்கும் தெரியும் முதல் இரண்டாம் பரிமாணங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. இந்த முதல், இரண்டாம் பரிமாணங்கள் என்ன என தெரிந்து கொண்டால் மட்டுமே நமக்கு பரிமாணம் குறிந்த அடிப்படை புரிதல் வரும்.
 
ஒரு மாய புள்ளி என்பது சுழிய (0) பரிமாணம். இதற்கு நீளம், அகலம், உயரம் என எதுவும் இல்லை. இப்படி ஒரு புள்ளியை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நாம் காகிதத்தில் வைக்கும் புள்ளிகள் எல்லாமே முப்பரிமாண புள்ளிகள் தான்.

நீளம் என்பது முதல் பரிமாணம், நீளம், அகலம் என்பது இரண்டாம் பரிமாணம், நீளம், அகலம், உயரம் என்பது மூன்றாம் பரிமாணம்.

முதல் பரிமாணம் என்பது நீளம் மட்டும் உடையது. நீளம் மட்டும் உடைய எந்த எந்த பொருளையும் நாம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நம்மால் அறியவோ உணரவோ முடியாது. இரண்டு புள்ளிகளுக்கு இடையில் நாம் வரையும் கோடு முதல் பரிமாணம் தான். ஆனால் அதற்கு நீளம் மட்டுமல்ல அகலமும் உயரமும் சிறிதளவாவது வந்து விடுகிறது. அதனால் நம்மால் முதல் பரிமாணத்தை கற்பனை செய்து பார்கிக்க முடியுமே தவிர பார்க்கவோ, தொட்டு உணரவோ முடியாது.

அடுத்து இரண்டாம் பரிமாணம் என்பது நீளம் அகலம் மட்டும் உடையது. நீளம் அகலம் மட்டும் உடைய பொருட்களை பார்க்க முடியும். தொட்டு உணரமுடியும். ஆனால் அது ஒரு நிழலாக தான் இருக்குமே தவிர உண்மையாக இருக்காது. இரண்டாம் பரிமாணத்திற்கு சிறந்த உதாரணம் நமது நிழல். நிழலை கவனித்து பாருங்கள் அதற்கு நீளம் இருக்கும், அகலம் இருக்கும் ஆனால் உயரம் இருக்காது. காகிதத்தில் வரையும் படம், தொலைகாட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகள், சினிமா, வானவில் என்பவை 2ம் பரிமாணத்திற்கு உதாரணங்கள். இவை எல்லாம் நிழல்கள் தானே தவிர உண்மை அல்ல. ஏனென்றால் நம்மால் இரண்டாம் பரிமாணத்தையும் அறிய முடியாது. நாம் எல்லாவற்றையும் முப்பரிமாணமாகத்தான் அறிகிறோம்.

நீளம், அகலம், உயரம் இந்த முன்றும் உள்ள எதுவும் மூப்பரிமாணம் உள்ளவை. நாம் மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ள அனைத்துமே முப்பரிமாண பொருட்கள் தான். 

நீளம், அகலம், உயரம் என்பது அளவீடுகள் என எதார்த்தமாகவே உங்களுக்கு தெரியும். காலம் என எதுவுமே இல்லை, காலம் என்பது ஒரு அளவீடு என்பது போல, பரிமாணம் என எதுவுமே இல்லை. பரிமாணம் என்பதும் ஒரு அளவீடு தான். நேற்று-இன்று-நாளை என்பது காலம். நீளம் அகலம் உயரம் என்பது பரிமாணம். இந்த காலமும் உண்மை அல்ல, பரிமாணமும் உண்மை அல்ல. இரண்டுமே அளவீடுகள் தான்.

காலமும் பரிமாணமும் மாயை என்றால் எது தான் உண்மை? காலமும், பரிமாணமும் அளவீடுகள் என்றால் அளப்பது யார்?, அளவாக இருப்பது எது? இந்த கேள்விகளில் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நினைவுக்கு வருகிறார். கூடவே சித்தர்களும்.

வேகத்தில் காலத்தையும் நீளத்தையும் கரைக்க முற்பட்டார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அட்டங்க சித்தியில் காலத்தையும், நீளத்தையும் கடக்க முற்பட்டனர் சித்தர்கள், உண்மையில் இருவருமே மாயையை தான் ருசித்தார்கள். அப்படியானால் உண்மை?

அறிவு பயணம் தொடரும்.

முந்தைய கட்டுரைகளை படிக்க www.arivakam.org

Thursday, June 27, 2019

காலம் என்பது என்ன? -Time travel 5

நேற்று இன்று நாளை இது தான் எதார்த்தமாக நாம் அறியும் காலம். இரவும் பகலும் மாறிமாறி வருவதை வைத்து நேற்று, இன்று, நாளையை கணக்கிடுகிறோம். பருவநிலை மாற்றத்தை வைத்து வருடத்தை கணிக்கிறோம். பிறப்பு, இறப்பை வைத்து தலைமுறையை கணிக்கிறோம்.

பிறப்பு, இறப்பு என்பதுதான் காலம் நமக்கு மிக முக்கியம் என்பதை உணர்த்துகிறது. பிறப்பு இறப்பு என்ற ஒன்று இல்லை என்றால் காலத்தை பற்றி யாரும் பெரிதாக கவலைப்படப் போவதில்லை.


பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழும் காலம். இந்த காலத்தில் திட்டமிட்டு பயணிக்கவே கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளோம். காலம் என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது கடிகாரம். உலகளாவிய அறிஞர்கள் ஒன்று சேர்ந்து உலக பொது கடிகாரத்தை உண்டாக்கி உள்ளனர். அந்த கடிகார இயக்கத்தின் மீச்சிறு அளவு தான் விநாடி. 60விநாடிகாள் ஒரு நிமிடம். 60 நிமிடம் ஒரு மணி நேரம். 24 மணிநேரம் ஒருநாள். இது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.

சரி இந்த கடிகாரம் தான் காலத்தின் அளவீடா என்றால், இல்லை என்பது தான் பதில். கடிகாரம் காலத்தை அளக்க பயன்படுத்தும் கருவிகளுள் ஒன்று. நமது சராசரி வாழ்க்கையில் இந்த கடிகாரத்தை பயன்படுத்துகிறோம். அணுவியல் அறிவியலாளர்கள் அணு கடிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். வானியல் அறிஞர்கள் ஒளி கடிகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

ஒளி ஒருவருடத்தில் செல்லும் தூரம் ஒளிவருடம் எனப்படும். ஒளிவருடம் பற்றி யோசித்தால் தலை சுற்றி விடும். வேண்டுமானால் பரிசோதித்து பாருங்கள். ஒளி ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணிக்கும். அப்படியானால் ஒரு மணி நேரம், ஒரு நாள் ஒரு வருடம் எவ்வளவு கிலோமீட்டர் பயணிக்கும் என்பதை சும்மா கணக்கு போட்டு பாருங்கள். இந்த தலையை சுற்றும் கணக்குகள் எல்லாம் நமக்கு வேண்டாம்.

அதே போலத் தான் அணு கடிகாரம். அணுவில் நிகழும் எலக்ட்ரான் சுழற்சி அணு கடிகாரத்தை நிர்ணயிக்கிறது. அணுவுள் ஒளித்துகள் எனப்படும் போட்டான் மின்காந்த அலைகளாக இயங்குகிறது. இந்த மின்காந்த அலைகளின் அதிர்வெண் அணுகடிகாரத்தின் மீச்சிறு அளவாக கொள்ளப்படுகிறது. இந்த அளவை கேட்டால் மறுபடியும் தலைசுற்றும். உதாரணமாக ஒரு நொடியில் ஒருலட்சம் பங்கு காலம். ஒருநொடியை ஒருலட்சத்தால் வகுத்தால் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஆனால் இது எல்லாவற்றையும் சாத்தியமாக்கி இருக்கிறது அறிவியல். அறிவியல் தரும் அந்த அற்புத நம்பிக்கையில் தான் நாம் கால இயந்திரத்தை கட்டமைக்க துணிந்துள்ளோம்.

இயல்பான கடிகாரம், ஒளிகடிகாரம், அணுகடிகாரம் இந்த மூன்றுமே அடிப்படையில் சுழல் என்ற ஒற்றை தத்துவத்தில் தான் இயங்குகிறது. துவக்கம்-முடிவு என்ற சுழல் இயக்கம் தான் காலமாக கொள்ளப்படுகிறது.  துவக்கமும் முடிவும் உள்ள எந்த இயக்கத்தையும் காலமாக கொள்ளலாம். காலம் என்பது ஒரு அளவீடு தானே தவிர, காலம் என ஒன்று இல்லை. இயக்கத்தை அளக்க காலம் என்ற அளவீட்டை பயன்படுத்துகிறோம்.

துவக்கம்-முடிவு என்ற சுழல் தான் காலத்தின் அடிப்படை இயக்கம். நிலையாக இருக்கும் எதற்கும் காலம் இல்லை. அதே போல நிலையற்று இருக்கும் எதற்கும் காலம் இல்லை. இரண்டும் மாறி மாறி வரும் எதற்கும் காலம் இருக்கிறது.

நமது உடல் பிறக்கிறது, வளர்கிறது, இறக்கிறது. இந்த இயக்க சுற்றை வாழ்க்கை காலம் என்கிறோம். இங்கு தான் அந்த சுவாரசிய கேள்வி பிறக்கிறது. நாம் பிறக்கிறோம், வளர்கிறோம், இறக்கிறோம் என்பது காலம் என்றால், நாம் மீண்டும் பிறப்போமா?

ஆம் என்ற அற்புத பதிலில் சித்தர்களின் காலப்பயணம் தொடர்கிறது. இல்லை என்ற கசப்பு மருந்தில் அறிவியலின் காலப்பயணம் முடிகிறது.

அறிவு பயணம் தொடரும்...
முந்தைய கட்டுரைகளை படிக்க www.arivakam.org

Sunday, June 23, 2019

கால இயந்திரம் THE TIME MACHINE - Time travel 4

36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப கிடைக்காத என ஏங்குகிறோம். இது தான் சராசரி மனிதர்களின் காலப் பயண தேடல்.

ஆனால் அறிவியலாளர்களின் காலப்பயண தேடல் அது அல்ல. அவர்கள் இந்த பிரபஞ்ச தோற்றத்தின் எல்லைக்கே செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். சிறுவயதை தாண்டி, தன் தாத்தா காலம், அதற்கு முந்தைய காலம், கற்காலம், டைனோசர் காலம், உயிர்கள் தோன்றா காலம் என பலநூற்றாண்டுகள் கடந்து செல்ல முடியுமா? இது தான் அறிவியலாளர்களின் காலபயண தேடல்.

இன்னும் சில அறிஞர்கள் எதிர்காலம் செல்ல முடியுமா என ஆய்வு செய்கின்றனர். உதாரணமாக 2050க்கு செல்ல முடியுமா என்பது போன்ற ஆய்வுகள் கூட நடக்கிறது.

மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிசம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்த மனவசிய கலை மூலம் ஒருவரது மூளையில் பதிந்துள்ள நினைவுகளை வெளிக் கொண்டு வர முடியும். அதன்படி பள்ளிப் பருவ நினைவுகளை ஒர கனவு போல கொண்டு வர முடியும். ஆனால் அது கனவு தானே தவிர, உண்மையான காலப் பயணமாக இருக்காது.

நமது உடலும் அந்த சின்ன வயதிற்கு செல்ல வேண்டும். நாம் உடலாலும் மனதாலும் பள்ளி பருவத்திற்கு செல்ல வேண்டும். நாம் மட்டுமல்ல, நாம் தொடர்புடைய அத்தனையும் அதே பருவத்திற்கு செல்ல வேண்டும். அது தான் உண்மையான காலப் பயணமாக இருக்கும். இது சாத்தியம் இல்லை என்கின்றனர் அறிவியலாளர்கள்.
 உடல் ஒருபோதும் இளமைக்கு திரும்பாது. அப்படி திரும்ப வேண்டும் என்றால் பிரபஞ்சத்தின் மொத்த அடிப்படை இயக்கங்களும் நேர் எதிராக திரும்ப வேண்டும். இது சாத்தியமே இல்லை என்கின்றது அறிவியல்.

அப்படியானால் காலப் பயணம் குறித்து அறிவியலின் கோட்பாடு தான் என்ன?

நமது உடல் இளமைக்கு திரும்பாது, அதே நேரத்தில் காலத்தை இறந்த காலத்திற்கு திருப்பலாம். இது தான் அறிவியலில் காலப் பயண கோட்பாடு. நமது உடல் தற்போதைய நிலையிலேயே இருக்கும். இதே நிலையில் இருந்தவாரே நமது இறந்த காலத்தை நம்மால் பார்க்க முடியும். உணர முடியும். வாழ முடியும். அதே போல நமது எதிர்காலத்தையும் நம்மால் பார்க்க, உணர முடியும். இதற்கு தேவை காலப் பயணம் செய்ய தகுந்த ஒரு இயந்திரம்.

காலப் பயண இயந்திரம் என்பது ஒரு கற்பனை. சுவாரசிய திரைப்படம் எடுக்க வேண்டுமானால் பயன்படும். அனால் எதார்த்தத்தில் அது சாத்தியமில்லை என்பதே பெரும்பான்மை அறிவியலாளர் கருத்து.

சாத்தியமே இல்லை என்று சொல்லப்பட்ட பலவற்றை பிற்காலத்தில் சாத்தியப்படுத்தி உள்ளது அறிவியல். அறிவியலால் முடியாதது எதுவும் இல்லை. அந்த நம்பிக்கையில் நாமும் காலப்பயண இயந்திரத்தை கட்டமைக்க முற்படுவோம்.

காலப் பயண இயந்திரத்தை கட்டமைக்க நமக்கு அடிப்படைத்தேவை காலம், இடம், பரிமாணம் குறித்த அறிவியல் புரிதல்கள். அடுத்து அதிக வெப்பம் மற்றும் குளிரை தாங்கும் உலோகம் அல்லது அலோகம் அவ்வளவு தான்.

அறிவு பயணம் தொடரும்....

முந்தைய கட்டுரைகளை படிக்க..
www.arivakam.org

Wednesday, June 19, 2019

உடலா, இயந்திரமா? Time travel -3

காலப் பயணம் செய்ய நமக்கு தேவை உடலா? இயந்திரமா?
உடலே சிறந்தது என்கின்றனர் சித்தர்கள். இயந்திரமே சாத்தியம் என்கின்றனர் அறிவியலாளர்கள்.


இதில் அறிவியலாளர்களின் கூற்று தான் இப்போதைக்கு சரியாகப் படுகிறது. ஏனென்றால் வெறும் உடலால் மட்டும் முயற்சித்து தோற்றுத் போனர்கள் சித்தர்கள். உடல் வளர்ச்சிதை என்ற விதிக்குள் இயங்குகிறது. மரணம் உடலை சிதைக்கிறது. உடலால் மரணத்தை கடக்க முடியவில்லை. அதிகபட்சம் 60 ஆண்டுகள். அதை தாண்ட சித்தர்களால் முடியவில்லை.  ஆனால் உடலுக்கான ஆயுளை 100 ஆண்டுகள் வரை நகர்த்துவதில் வெற்றி கண்டுள்ளது அறிவியல்.

ஒரு காலத்தில் கூடுவிட்டு கூடுபாயும் கலையில் சித்தர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். எளிமையாக அவர்களுக்கு அது சாத்தியப்பட்டது. ஆனால் அதை ஒரு மாயையாக உணர்ந்தபோது சித்தர்கள் வெட்கித் தலை குணிந்தார்கள். பொது சமூகத்திடம் ஏமாற்றுகாரர்கள் என்ற கெட்ட பெயர் பெற்றனர்.

கூடுவிட்டு கூடுபாய்தல் என்பது கேலிப்பொருளானது. அதை பற்றி பேச மட்டுமல்ல சிந்திக்கக் கூட சித்தர்கள் தயங்கினார்கள். அத்தோடு அழிந்து போனது அந்த கலை. (கூடவிட்டு கூடுபாய்தல் கலையை அடுத்தடுத்த பதிவுகளில் கற்றுத் தருகிறேன்.)

கூடுவிட்டுகூடு பாய்தல் ஒரு குற்றச் செயல். அது ஒரு மனநோய் என்று உணர்ந்தனர் சித்தர்கள். அதற்கு மாற்றாக அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினர். அதன் பயனால் விளைந்தது தான் இன்று உலகமே வியந்து பாராட்டும் சித்த மருத்துவம்.

சித்த மருத்துவம் சித்தர்கள் உலகுக்கு அளித்த பொக்கிசம். உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் என்ற திருமந்திரத்தில் சித்த மருத்துவம் என்ற அற்புதம் பிறந்தது. அதுவே மருத்துவ அறிவியலுக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

இனி அறிவியலுக்கு வருவோம்.

உடல் என்பது வளர்ந்து சிதையும். இயந்திரம் அப்படி அல்ல. அது வளராது அதே நேரத்தில் சிதையவும் செய்யாது. வளராவிட்டாலும் பரவாயில்லை சிதையாமல் இருந்தால் போதும். எனவே இயந்திரமே காலப் பயணத்திற்கு சிறந்தது என்பதில் உறுதியாக உள்ளனர் அறிவியலாளர்கள்.

இந்த பிரபஞ்சம் பல கருந்துளைகளை கொண்டுள்ளது. இந்த கருந்துளைகளில் காலம் மிக மிக மெதுவாக செல்கிறது. கருந்துளைகளுக்கு இடையே உள்ள wormholeபிரபஞ்சத்தின் எதிர்பிரபஞ்சத்தை இணைக்கும் இணைப்பு பாலம். இந்த பாலத்தின் வழியே கடந்து செல்லும் இயந்திரத்தை கண்டு பிடித்து விட்டால் குறுகிய காலத்தில் எதிர்பிரபஞ்சத்தை அடைந்து விடலாம். 

அந்த எதிர் பிரபஞ்சம் நமது தற்போதைய பிரபஞ்சத்தின் காலக் கண்ணாடி. அங்கிருந்து நமது தற்போதைய இறந்த நிகழ் எதிர்கால பிரபஞ்சங்களை பார்க்க முடியும். இது தான்  காலப் பயணம் குறித்த அறிவியலாளர்களின் கோட்பாட்டு சுருக்கம். இது குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்.

அறிவு பயணம் தொடரும்....

our new web : www.arivakam.org

Sunday, June 16, 2019

அறிவியலா? ஆன்மீகமா? Time travel - 2

காலப்பயண Time travel ஆராய்ச்சியில் இருபிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

1.அறிவியலாளர்கள், 2.சித்தர்கள். அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளியின் வேகம். சித்தர்கள் தேர்ந்தெடுத்த பாதை கூடுவிட்டு கூடு பாய்தல். 

இந்த இரண்டு பாதைகளில் எது சரி, எது தவறு என இன்று வரை தீர்மானிக்க முடியவில்லை. காரணம் இரண்டு பாதைகளுமே கருத்தியலில் தான் உள்ளதே தவிர, செயல்முறை விளக்கங்கள் இல்லாதவை.

அறிவிலா? ஆன்மீகமா? எது சரியான பாதை? என்ற கேள்வியே காலப்பயணத்திற்கான அடித்தளமாக அமைகிறது. அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல. அறிவை தேடி நாம் பயனிக்கும் இருபாதைகள் தான் அறிவியலும் ஆன்மீகமும். 

அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது அறிவியில். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நம்மை வளைத்துக்கொள்வது ஆன்மீகம். ஆக இரண்டுமே அறிவின் பயணங்களே தவிர அறிவியல் மட்டுமே அறிவுடமை. ஆன்மீகம் என்பது மூடநம்பிக்கை என ஒதுக்குவது தவறு.

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதா? பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நாம் வளைவதா? 

காலத்தை வளைத்து நமக்கு ஏற்றவாறு மெதுவாகவும், வேகமாகவும் பயணிக்க செய்தால், காலப்பயணம் சாத்தியம் என்கின்றனர் அறிவியலாளர்கள். காலத்திற்கு ஏற்றவாறு நாம் வளைந்து சென்றால் காலம் கடந்து வாழமுடியும் என்கின்றனர் சித்தர்கள். 

காலத்தை கடக்கும் இயந்திரம் வேண்டும் என்கின்றனர் அறிவியலாளர்கள், காலம் கடக்கும் உடல் வேண்டும் என்கின்றர் சித்தர்கள். இதில் சித்தர்களை விட அறிவியலாளர்கள் தான் தொடர் வெற்றியை பெற்று வருகிறார்கள். காலம் கடக்கும் உடல் தனிமனித தேடலாக சுருங்கியதால் தோற்றவர்களாக நிற்கின்றனர் சித்தர்கள்.

சித்தர்கள் கண்டறித்த எண்ணயியலை(மனக்கணக்கு), எண்ணியலாக(எண்கணக்கு) மாற்றியது தான் அறிவியலாளர்களின் முதல் வெற்றி. அதுவே அறிவியலின் அடுத்தடுத்த பிரமாண்ட வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்து விட்டது.

எண்ணயியலா(ஆன்மீகம்)? எண்ணியலா(அறிவியல்)? - நமக்கு எளிமையான பாதை எது?
காலத்தை கடக்கும் உடலா?, காலத்தை கடக்கும் இயந்திரமா? - நாம் எதை தேர்ந்தெடுக்க போகிறோம்?

அறிவு பயணம் தொடரும்....

Wednesday, October 8, 2008

காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)

காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம்.

இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்வோம்.

பொருள் வெளி நிலைமாற்றம் தான் இயக்கம்
இயக்கத்தின் ஒப்பீடுகள் தான் அறிவு.
அறிவின் அளவீடுகள் தான் காலம்.

உதாரணமாக: பொருள் வெளியாவது இயக்கம். பொருள் வெளியாகி மீண்டும் பொருளாகும் போது பிந்தைய பொருளுக்கும் முந்தைய பொருளுடனான அறியும் திறன்(ஆற்றல்) அறிவு. அறிவின் நிலை அளவீடுகள் காலமாகிறது. அதாவது பிந்தைய பொருளுக்கு முந்தைய பொருள் இறந்ததகாலம்., எதிர்வரும் பொருள் எதிர்காலம்.

இயக்கம், அறிவு, காலம் இவற்றிற்கான வேறுபாடுகளை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்

உதாரணமாக 1, 2, 3, 5, 8, 13, 21 இந்த முறைபடிதான் காலஅறிவு அமைகிறது. இதில் இயக்கம் என்பது 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, .... இப்படி சீராக வருவது. ஆனால் அறிவு என்பது 1, 2, 3, 5, 8, 13... என அமையும். அறிவின் சுற்றுகள் படி தான் காலமும் அமையும். இதில் 1, 2, 3, 5, 8 இதெல்லாம் அறிவு. இதில் காலம் அறியப்படும். இடைபட்ட 4, 6, 7, இதெல்லாம் மாயைகள் இது அறிவுக்கு உட்படாது. ஆனால் இயக்கத்துக்கு உட்படும். இயக்கம் எல்லாம் காலமாகாது. ஆனால் அறிவும் காலமும் இயக்கத்துக்கு உட்பட்டது.

இயக்கம் என்பது படிப்படியாக சீராக தான் நிகழும். ஆனால் காலம் என்பது அப்படியல்ல. காலம் அறிவை பொருத்தே அமையும். இதை ஜன்ஸ்டீன் உதாரணத்திலேயே விளக்குகிறேன். காதலிக்காக காத்திருக்கும் நேரத்திலும், காதலி வந்த பின் கடக்கும் நேரத்தின் போதும் நம் கையில் உள்ள கடிகார முள் ஒருபோல சீராக தான் இயங்குகிறது. ஆனால் கா காதலியின் வருகைக்கு முன்னும் பின்னும் காலத்தின்நகர்ச்சியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

அதாவது 1, 2 ,3 ,4, 5, 6, 7, 8, .... இப்படி தான் இயக்கம் சீராக நிகழ்கிறது. ஆனால் காலமோ அறிவுக்கு ஏற்ப 1, 2, 3, 5, 8 ... இப்படி வருகிறது.

காலஅறிவு என்பது அறிவின் இறந்த -  நிகழ் - எதிர் காலங்களின் கட்டமைப்பு. அதை இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உடல் ஒத்துழைப்பை பொருத்து இயல்பாகவும் அறிவியல்ரீதியிலும் திருப்ப முடியும்.

உதாரணமாக மனிதனின் நினைவறிவை மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிசம் முறைகளின்படி இறந்தகாலத்துக்கு அழைத்து செல்லலாம்.

காலசக்கரம் என்பது ஒட்டுமொத்த காலஅறிவையும் அதாவது பிரபஞ்சத்தையே இறந்தகாலத்துக்கு திருப்புவது. உதாரணமாக மெஸ்மெரிசம் மூலம் மனிதனின் நினைவறிவை மட்டுமே இறந்த காலத்துக்கு திருப்ப முடியும். ஆனால் மனிதனையே திருப்ப முடியாது. அதாவது குழந்தை நினைவுகளை திருப்பும் அதேவேளையில் உடலையும் காலசூழலையம் இறந்த காலத்துக்கு திருப்ப முடியாது.

காலசூழலையே இறந்த காலத்துக்கு திருப்புவது தான் காலச்சக்கரத்தை திருப்புவது. அதாவது மனிதன் மனதோடு உடலையும் காலசூழலையும் குழந்தையாக திருப்புவது. இங்கு காலசூழலை திருப்புவது என்றால் அந்த மனிதன் குழந்தையாக இருந்தபோது அவனோடு இருந்த காலசூழலையும் திருப்புவது.

உதாரணமாக நீஙகள் 7 வயதுக்கு காலசக்கரத்தை திருப்புவதாக வைத்துக்கொள்வோம். அங்கு நீங்கள் மட்டும் குழந்தையாக மாட்டீர்கள் உங்களோடு உங்கள் அம்மா அப்பா, தம்பி தங்கை, கூடபடித்த நண்பர்கள், ஆசிரியர், நாய்குட்டி, மரம், செடி கொடி, ஆறறுநீர் இப்படி அனைத்து சூழலுமே உங்களின் அதே குழந்தை பருவத்திற்கு திருப்பும். சுருக்கமாக உங்களோடு நேரடியாக மறைமுகமாக தொடர்பு உலகத்தையே( பிரபஞ்சத்தையே) உங்கள் குழந்தை பருவத்திற்கு திருப்புவது தான் காலசக்கரத்தை பின்னோக்கி திருப்புவது. இப்படி குழந்தை பருவத்தை மட்டுமல்ல முந்தைய பிறவிகள் என எவ்வளவு பின்னோக்கி வேண்டுமானாலும் திருப்பலாம்.

காலசக்கரத்தை திருப்ப முதலில் அதற்கு ஏற்ப நமது உடல்அறிவை தயார்படுத்த வேண்டும். உதாரணமாக நமக்கு நிகழ்காலத்தில் இருக்கும் அறிவு இறந்த காலத்தின் எதிர்காலம். இதை மீண்டும் இறந்தகாலத்துக்கு திருப்பும் போது அது இந்த நிகழ்காலத்தின் எதிர்காலமாக தான் வரும். இப்போது நமது நிகழ்காலாம் முந்தைய நிகழ்காலத்தின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்ற இருஅறிவுக்கு உட்படும். இப்போது நமது அறிவை மீண்டும் எதிர்காலத்துக்கு திருப்பினால் முந்தைய நிகழ்காலமே வரும். இதில் காலஅறிவு நமக்கு காலசக்கரமாக இருந்தால் மட்டுமே அறிவாக இருக்கும் இல்லையென்றால் அது மாயையாக தான் இருக்கும்.

இதை புராதாண கதைகளில் உதாரணப்படுத்தலாம்: மாயை என்றால் என்ன என்று கேட்ட ஒரு பக்தனிடம் தனக்கு தாகமாக இருக்கிறது ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீர் எடுத்துவர அனுப்புகிறார் இறைவன். தண்ணீர் எடுக்க சென்ற பக்தன் ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணின் மீது காதல்வசப்படுகிறான். அவள் பின்னால் செல்லும், பக்தன் அவளை திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறான். குழந்தைகள், பேரக்குழந்தைகள் பிறக்கிறது. பக்தனுக்கு வயதாகி காலங்களும் ஓடுகிறது. பக்தன் வெளியூர் சென்ற ஒரு நாள் திடீர் என ஊரெங்கும் வெள்ளபெருக்கு வந்து மக்கள் அனைவரும் நீரில் முழ்குகின்றனர். இதில் பக்தனின் மனைவி குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்படுகின்றனர். ஊருக்கு திரும்பிய பக்தன் தன் மனைவி குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் சோகமாக ஆற்றங்கரை பக்கம் நடந்து செல்கிறான். அப்போது மரத்தடியில் அமர்ந்திருந்த இறைவன் பக்தா நான் தாகத்துக்கு தண்ணீர்கேட்டேனே நீ கொண்டுவரவில்லையா என கேட்கிறார். அதிர்ச்சியடைந்த பக்தன் இறைவா உன் மாயையின் திருவிளையாடல் இப்போது புரிகிறது என காலில் விழுந்து வணங்குகிறான்.

இந்த கதை வெறும் உதாரணம் மட்டுமே. இதில உண்மை என்னவென்றால் காலஅறிவை பின்னோக்கி சுற்றும் போது நமக்கு காலசக்கரம் சாத்தியப்பட வேண்டும். இல்லையென்றால் எல்லாம் கனவாக அதாவது மாயையாக தான் இருக்கும். காலசக்கரம் என்பது மெய்ஞானம் அதாவது மாயையையும் ஜீரணித்துக்கொள்ளதக்க அறிவு. இன்னும் ஆழமாக சொன்னால் அறிவு மாயை இரண்டையும் சீர்தூக்கிப்பார்க்கும் மெய்யறிவு நமக்கு வேண்டும். இதை தான் ஆன்மீக ஞானிகள் ஞானமாக இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கு மேற்சொன்ன விளக்கங்கள் அனைத்தும் நிச்சயம் குழப்பமாக தான் இருக்கும். இதற்கு நமது அறிவின் பொருளறிவு புரிதல் தான் காரணம். இந்த பிரபஞ்ச கட்டமைப்பை சரியாக புரிந்துகொள்ளும் போது நமக்கு காலசக்கரம் விடயம் எளிதான ஒன்றாகிவிடும். அதை பயிற்சி மூலம் நிரூபணப்படுத்தவும் செய்யலாம்.

இந்த பிரபஞ்சம் என்பது என்ன? பொருளாக இருப்பது என்ன? அடிப்படை இயக்கத்துக்கு காரணம் என்ன இந்த விடயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு, காலசக்கரம் குறித்து மனிபிறவியும் தொடர்வாழ்க்கையும் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா? பிரபஞ்சம் எப்படி தோன்றி இயங்குகிறது)

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... arivakam@gmail.com

Wednesday, September 17, 2008

காலம் என்பது என்ன? (உலகின் அவசரத்தேவை - 14)

இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்). சரி நாம் தேடிப்பார்ப்போம்.

காலம் என்பது என்ன?

போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அணுவுக்குள் அணுதுகள்களின் அலைவீச்சு அளவை வைத்து மீச்சிறு விநாடிகளாக சொல்வார்கள்.

நாம் தனி ஊசலின் அளவை விநாடி என்கிறோம். அணுவியல விஞ்ஞானிகள் அணுதுகள் அலைவீச்சை விநாடி என்கிறார்கள் அளவு தான் வித்தியாசமே தவிர இயக்கம் ஒன்று தான்.

சரி அலைவீச்சு தான் காலமா? இல்லை. அலைவீச்சு என்பது நமக்கு காலத்துக்கான ஒரு அளவீடு. அதாவது காலத்தை அளக்க அல்லது தெரிந்து கொள்ள நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு அளவீடு.

காலத்தை விநாடி, மைக்ரோ செக்கென்ட, நேனே செக்கென்ட் என்ற அளவீடுகளை வைத்து கணிக்கிறோம். அல்லது அடையாளப்படுத்திக்கொள்கிறோம்.

காலத்தை அளக்கும் கருவிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அலைவீச்சை வைத்தே இயங்குகின்றன. அதாவது காலத்தை அளவிடுகின்றன.

அலை வீச்சு என்பது என்ன என பார்ப்போம்

அலைவீச்சு என்பதை முதலில் குவாண்டவியல் தத்துவத்தில் பார்க்கலாம்

ஒளியின் இயக்கத்தை தான் குவாண்டவியலில் அலைவீச்சாக குறிப்பிடுகிறார்கள்.

ஒளியின் என்றால் துகளும் அலையும் மாறிமாறி வரும் ஒரு நிலை. கண்ணொளி, சூரிய ஒளி, மின்காந்த ஒளி இதெல்லாம் ஒளியின் வகைகள் அதாவது துகளும் அலையும் மாறிமாறி வரும் நிலையின் வகைகள்.

துகளும் அலையும் மாறி மாறி வருவது அதாவது ஆன்( on ), ஆஃப்(off ) இது தான் ஒளி. இதின் இயக்க வித்தியாசத்தையும் அறிவையும் பொருத்து ஒளியின் வகைகள் மாறுபடும். அந்த மாறுபாடுகளை தான் நாம் மைக்ரோ ஒளி, லேசர் ஒளி, எஃஸ் கதிர்கள், சூரிய ஒளி, கண்ணுரு ஒளி எனவெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம்.

சரி அப்படி ஆன்(on) ஆஃப்(off ) ஆக மாறுவது எது என கேட்டால் இப்போதைக்கு பொருள்- வெளி என எடுத்துக்கொள்ளுங்கள். பொருளாக இருப்பது என்ன என்பது குறித்து அறிவு விளக்கப்பகுதியில் பார்க்கலாம்.

பொருள் இருக்கு(on), இல்லை(off ). இதுதான் ஒளி. இந்த இயக்கம் தான் மின்காந்த அலைகள், அணுக்கரு உட்பட எல்லா அற்றல்களிலும் இருக்கிறது. பொருட்களிலும் இருக்கிறது.

இங்கு ஒளியின் இயக்கம் குறித்து ஒரு எதார்த்த ஐயம் வரலாம்.

ஆன் ஆப் தான் ஒளி என்பது சரி. ஆனால் அது எப்படி நகர்கிறது? ஒளியின் வேகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது எப்படி இடம்பெயர்கிறது?

உதாரணத்தில் விளக்கலாம். நிலையாக இருக்கும் ஒரு கடுகை(துகள்) நாம் கண்ணனால் பார்க்கிறோம். அது நிலையாக இருக்கும் போது கடுகு பொருள். அதை சுற்றியுள்ள பகுதி வெளி. இங்கு இனி கடுகு திசைவேகத்தில் இயங்குவதாக எடுத்துக்கொள்வோம். கடுகு நகர்கிறது. அப்போது நாம் மேல் சொன்ன தத்துவப்படி கடுகு மறைந்து அங்கு வெளி வரவேண்டும். வெளி மறைந்து கடுகு வர வேண்டும். கடுகு நகரக்கூடாது. தோன்றி மறைய வேண்டும் அப்படி தானே. ஆம் அது தான் அங்கும் நடக்கிறது.

கடுகு நகருகையில் நமது பார்வையும் நகர்குறது. அப்போது கடுகு வெளியை விலக்கி செல்வதாக நாம் அறிகிறோம். ஆனால் அங்கு நமது பார்வை நகரவில்லை கடுகு மட்டும் நகர்வதாக வைத்துககொள்வோம். நாம் அறிவது என்ன? கடுகு மறைந்து விட்டது அவ்வளவு தான். நமது பார்வையும் நகர்வதால் கடுகு தோன்றி மறையாமல் நகர்வதாக நாம் அறிகிறோம்.

கம்பியூட்டர் மொழி தெரிந்தவர்களுக்கு இது எளிதில் புரியும். கம்பியூட்டர் ஹார்ட் டிஸ்க் அல்லது செல்போன் சிம், மெம்மரி காடுகளில் இந்த இயக்கத்தை நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஒருபுள்ளி அனைந்து மறுபுள்ளி தோன்றுவதில் தான் கம்பியூட்டர் மற்றும் மெம்மரிக்கார்டின் அடிப்படைமொழி(இயக்கம்) இருக்கிறது.

சரி அலைக்கு வருவோம் பொருள்(துகள்) அனைந்து மறைந்து மற்றதுகள் வருகிறது. ஆனால் அது எப்படி நகர்கிறது? அங்கு தான் அலை தத்துவம் புரியக்கிடக்கிறது. அலை என்றால் அதற்கு எல்லை கிடையாது அதே நேரத்தில் பொருளுக்கு எல்லையும் மையமும் இருக்கிறது. ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையையும் இழந்துவிடுகிறது. மீண்டும் அது பொருளாகும் போது சூழலுக்கு ஏற்ப அதாவது வெளிக்கும் பொருளுக்கும் உள்ள அறிவுக்கு ஏற்ப மைத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது.

உதாரணமாக ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகரத்தக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது. இது தான் அடிப்படை நகர்ச்சிக்கான தத்துவம்.

அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம்.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல.

சரி உதாரணங்களுடன் பார்ப்போம்.

பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு எனபது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொருத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் த்ததுவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை(பொருளை) பொருத்தது என்பது சரி.

ஆனால் நமக்குள் இங்கு எதார்த்தமாக எழும் ஐயம்

ஒரு விதை செடியாகி மரமாகி பூவாகி காயாகி விதையாகிறது இது ஒரு காலசுற்று. ஆனால் உயிரற்ற பொருட்களில் அப்படி இல்லையே கல் மண்ணாகிறதே தவிர மண் மீண்டும் கல்லாவதில்லையே.

இங்கு தான் அறிவு தேவைப்படுகிறது.

நம்முடைய(மனிதனுடைய உயிரிகளுடைய) அறிவு வளர்ச்சிதைவோடு ஒத்துபோய் விட்டது.

ஒரு திரைப்பட சுருளை பின்னோக்கி சுற்றினால் இயக்கங்கள் பின்னோக்கி வநதவண்ணமே நகர்கிறது. ஆனால் நமது எதார்த்த வாழ்க்கையில் அது சாத்தியப்படுமா? அதாவது குழந்தை குமரனாகி கிழவனாது போல. அதே சீரோடு அச்சு பிழையாமல் கிழவன் குமரனாகி குழந்தையாக முடியுமா?

இது கொஞ்சம் அநாகரீகமான உதாணம் தான் அனால் புரிந்து கொள்வதற்கு எளிதானது. நாம் காலையில் உண்ட உணவு கழிவாகிறது. அதை பின்னோக்கி இயக்கினால் அதே கழிவு சென்ற அதே பயணததில் பாதையில் மீண்டும் உணவாகுமா?

இதற்கு பதில் ஆம் என்பது தான். அதாவது காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முடியும் என்பது தான் பிரபஞ்ச ரகசியம்.

நம்முடைய அறிவின் பயணம்(இயக்கம்) முன்னோக்கி மட்டும் செல்வதால் நமக்கு காலமும் முன்னோக்கி செல்கிறது. அறிவை நீங்கள் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் காலமும் இயக்கமும் இந்த பிரபஞ்சமும் திரும்பும்.

இந்த ரகசியத்தை தான் ஆன்மீகஞானிகள் நமக்கு மெய்ஞானமாக போதித்துள்ளார்கள்.

அறிவு என்பது என்ன? அதை எப்படி பின்னோக்கி திருப்புவது? இயக்கமாக இருக்கும் பொருளிலும் வெளியிலும் என்ன இருக்கிறது? அடிப்படை பொருள் என்ன? அது எப்படி வந்தது? இது குறித்த விளக்கங்களை அடுத்தடுத்த பதிப்புகளில் பார்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் ( மாயை என்பது என்ன? அறிவு என்பது என்ன? காலம் எப்படி வந்தது)

உலகளாவிய சிந்தனையாளர்களுக்கு ஓர் அன்பான அழைப்பு: அறிவகம் கட்டுரை தொடர் என்பது பொழுதுபோக்குகாகவும் தனிப்பட்ட ஒருவரின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவும் எழுதப்படுவது அல்ல. அறிவுபரிபூரணம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட காத்திருக்கும் கட்டுரை தான் இங்கு வலைபதிவில் பவனி வருகிறது. இதில் உலகளாவில் மேம்பட்ட ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். எந்த ஒரு சிந்தனையையும் உலகளாவில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் போது தான் முழுமையான உண்மை தன்மை ஒளிரும்.

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... arivakam@gmail.com