Tuesday, July 29, 2008

யார் இந்த தீவிரவாதி? (உலகின் அவசரத்தேவை-6)

(பெங்களூர் குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் பற்றி கடைசி பத்தியில் குறிப்பிட்டுள்ளோம். முன்னதாக சர்வதேச தீவிரவாதிகள் பற்றி பார்ப்போம்)

தீவிரவாதிகளும் சர்வதேச பயங்கரவாதிகளும் பெருகியுள்ள தற்போதைய சூழலில் நாட்டின் கௌரவம், பாதுகாப்பு, கருதி அணுஆயுத தயாரிப்பு அவசியமானதாகி விடுகிறது என துணிச்சலோடு சொல்கின்றன அரசுகள். அதற்கு ஏகோபித்த ஆதரவும் தருகின்றனர் நாட்டு மக்கள்.

சரி பேரழிவு ஆயுதங்கள் பெருக இவை தான் உண்மையான காரணங்களா?

தீவிரவாதம், சர்வதேச பயங்கரவாதம் இவை தான் ஒவ்வொரு நாடும் நேரடியாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள். தீவிரவாதங்களும் வன்முறைகளும் இல்லாத நாடுகளே இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் மிகப்பெரியதொரு முட்டுக் கட்டை என்பது உண்மைதான். ஆனால் எப்படி வந்தது இந்த தீவிரவாதம். யார் இந்த தீவிரவாதிகள்?

சுயநாட்டில் தானே துடித்தெழுகிறார்கள் தீவிரவாதிகள்! அடக்குமுறைகளை எதிர்த்து, மதஅநீதிகளை எதிர்த்து, சுரண்டல்களை எதிர்த்து, உணர்ச்சிக்கொடூரங்களை எதிர்த்து மொத்தத்தில் வன்முறைக்கு எதிராக உருவாகும் மற்றொரு வன்முறை தானே தீவிரவாதம்!

என்னடா ஆரம்பத்திலேயே தீவிரவாதத்திற்கு வக்காளத்துவாங்குகிறானே என்று நினைக்காதீர்கள், காலாகாலமாக தோன்றிய ஒவ்வொரு தீவிரவாதத்தின் ஆரம்பத்திற்கும் அரசியல் சூழ்ச்சிகளும், அநீதிச் சுரண்டல்களும் தான் மூலகாரணங்களாக இருந்திருக்கின்றன!

தீவிரவாதிகளை மூன்று ரகங்களாக பிரிக்கலாம். 1 நியாயத்துக்காக போராடும் போராளிகள். 2. அரசியல் ரவுடிகளுக்கும் மதபேய்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்கும் வேலைவெட்டியில்லாத உள்ளூர் தாதக்கள். 3. சர்வதேச பயங்கரவாதிகள்.

நியாயத்துக்காக போராடும் போராளிகளை ஒருபோதும் ஆயுதங்களாலும், அடக்குமுறை சட்டங்களாலும் அடக்கிட முடியாது. அணுஆயுதத்தை கொண்டு மட்டுமல்ல, வேறு எந்த ஆயுதத்தை கொண்டும் இத்தகு தீவிவாதிகளை ஒடுக்கிடமுடியாது. இப்படிப்பட்ட தீவிரவாதிகளை மாற்ற ஒரேஒரு வழிதான் உள்ளது. அது சமரசம் சாமாதான பேச்சு, அவனுக்கு நியாயம் கிடைக்கச் செய்யல்.

சரி நியாயமும் தர்மமும் உள்ள போராளிகளை ஒடுக்க அணுஆயுதம்தேவையில்லை தான். ஆனால் போராட்டம் என்ற பெயரில் தனிப்பட்ட நியாயத்துக்காக அப்பாவி பொதுமக்களையும், பொது சொத்துக்களையும் சேதப்படுத்துவதையும், ஈவு இரக்கமற்ற வன்முறை கொலைகளையும் எப்படி நியாயம் என ஏற்றுக்கொள்ள முடியம்? சர்வதேச பயங்கரவாதிகளும், எல்லை தான்டிய தீவிரவாதிகளும், நாட்டின் அமைதியை சீர்குலைத்து, பேரழிவு வன்முறைகளை தூண்டிவிடும் போது ஒட்டுமொத்த நாடே சமரசம் சமாதானம் என அடங்கிப்போக முடியுமா? என்று எதார்த்த எண்ணங்கள் மனதுள் எழுவது நியாயம் தான்.

சர்வதேச பயங்கரவாதிககள், எல்லைதான்டிய தீவிரவாதிகள் இவைகள்தான் அணு ஆயுதங்கள் பெருக முக்கிய காரணங்கள் என்று கூறும் அரசியல்வாதிகளையும், அதற்கு ஆமாம் போடும் நாட்டு மக்களையும் பார்த்து ஒரு கேள்வி
யார் இந்த சர்வதேச பயங்கரவாதி
ஒட்டு மொத்த நாடும்
ஒரு அரசாங்கத்தை எதிர்த்து போராடினால்
அதன் பெயர் புரட்சி.

ஒரு நாடு மற்றொரு நாட்டை
பகிரங்கமாக அடக்கினால்
அதன் பெயர் போர்.

ஒர் அமைப்பு வன்முறை ரீதியில்
அரசாங்கத்தை எதிர்த்தால்
அதன்பெயர் தீவிரவாதம்.

பகை நாடுகள் மறைமுகமாக
தீவிரவாதிகளை கொண்டு கலகம் செய்தால்
அதன் பெயர் சர்வதேச பயங்கரவாதம்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவத்தில் பகை நாட்டுக்கு எதிரி நமக்கு நண்பன் எனற முடிவோடு, உள்நாட்டில் கொள்கை அளவில் மட்டுமே நிற்கும் சிறுசிறு போராட்ட அமைப்புகளின் தோளோடு தோள்கோர்த்து, பணத்தையும் ஆயுதத்தையும் அத்துனை ஏன் ராணுவத்தையே அனுப்பும் அரசியல்வாதிகள் தானே முதல் பயங்கரவாதிகள்.

அவநம்பிக்கையும் அதிகாரஅத்துமீரல் குணமும் கொண்ட அரசியல்வாதிகளின் வளர்ப்பு பிள்ளைகள் தானே இந்த சர்வதேச பயங்கரவாதிகள்.

சின்ன சின்ன போராட்ட அமைப்புகளுக்கு மதம், இனம், மொழி, எல்லை என்ற எதோ ஒரு போர்வையை போர்த்தி விட்டு, அதிகார அத்துமீரல்களையும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும், முக்கியமாக பொருளாதார சுரண்டல்களை சாதித்துக்கொள்ள சர்வதேச அரசியல்வாதிகள் ஏற்படுத்தி கொண்ட மறைமுக அமைப்புதானே இந்த சர்வதேச பயங்கரவாதம்.

எந்த ஒரு மனித மனதிற்குள்ளும் புனிதப்போர், தர்மயுத்தம் என்ற நியாயங்கள் திணிக்கப் பட்டுவிட்டால் தொலைநோக்கு பார்வையற்ற அந்த மனங்களுக்கு, தன்உயிரோ, மற்றவர்கள் உயிரோ, மனசாட்சியோ, நியாய தர்மமோ முக்கியமாக தெரியாது. மாறாக புனிதப்போரும், தர்மயுத்தமும் தான் முக்கியம். என்ற அர்த்தமற்ற போலி நியாயத்தில் தான் சாகும் வரை போராடிக்கொண்டிருக்கும்.

அரசியலை குற்றம் சுமத்தி அதே நேரத்தில் திவிரவாத வன்முறைகளை நியாயம் என்று சொல்லவில்லை. ஒரு அமைப்பு தன் தனிப்பட்ட எதிரிகளை அழிக்க, தன் தனிப்பட்ட கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வன்முறையை கையாண்டு, அப்பாவி பொது மக்களையும் பொது சொத்துக்களையும் சேதப்படுத்துகிறது என்றால் நிச்சயமாக அந்த அமைப்பு ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டியது தான். அதே நேரத்தில் தீவிரவாதிகளை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டிவிட்டு, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக வெளியேமட்டும் சமாதானம் பேசி, உள்ளுக்குள் கோரா அழிவு எண்ணங்கள் கொண்ட மதக்கொள்ளையர்களும், அதற்கு துணைபோகும் அரசியல்வாதிகளுமே முதலில் ஒழிக்கப்படவேண்டிய பயங்கரவாதிகள்.

தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு குழந்தையையும் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளின் சுயநலபோக அக்கிரமங்கள் தான் இன்றைய அத்துனை பேரழிவு ஆயுதப்பெருக்கத்திற்கும் முக்கிய காரணங்களாக உள்ளன.

தான் தான் உலகின் ராஜா. தனக்கு கீழ்தான் உலகம் என்ற அகந்தை கொண்ட சர்வதேச அரசியல் வாதிகள் இருக்கும் வரை தீவிரவாதிகளும் இருப்பார்கள்., பேரழிவு ஆயுதங்களும் இருக்கும். இவர்களை அடியோடு களைஎடுக்க மக்கள் முயன்றாலே போதும் உலகம் அமைதியாகிவிடும்.

(இந்த கட்டுரை தொடருக்கு சம்மந்தமில்லை என்றாலும் பெங்களூர் அகமதாபாத் குண்டுவெடிப்புகள் பற்றி குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயம்)
பெங்களூரில் குண்டு வெடித்தது. வெடித்த நிமிடம் முதல் நாடெங்கும் பலத்த பாதுகாப்பு, பரிசோதனை. ஆனாலும் அடுத்த நாள் அகமதாபாத்தில் குணடு வெடிக்கிறது. அப்படியானால் காவல்துறையின் பாதுகாப்பும் பரிசோதனையும்?... காவல்துறை என்ன செய்யமுடியும், அதற்கு மேலே ஒரு அதிகாரவர்க்கம்(அரசியல், மதம், பணம்) இருக்கிறதே. குறிப்பிட்ட சிலர் நாட்டையே ஆட்டிப்படைக்கிறார்கள் என்றால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கோழைகளா?

அரசியல்வாதி அவனது அரசியல் காழ்புணர்ச்சியை சாதிக்க துடிக்கிறான், மதவாதி என்னவென்று சொல்வது மதம்பிடித்து அலைகிறான். ஆண்டுக்கு நாலுமுறையாவது மதம்பிடித்து ஆடினால் தானே அவனுக்கும் ஏதோ வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வரும். குண்டு வைக்க சொன்னது மேற்சொன்ன இரண்டு வர்க்கத்தில் ஏதோ ஒரு வர்க்கம். குண்டு வைத்தது?.. பணத்துக்காக நம்மில் இருந்து விலைபோன ஒருசில பரதேசிகள்.
அரசியல்வாதிகளே! காழ்ப்புணர்ச்சியை காட்டுங்கள் உங்கள் எதிரிகளிடம் நேரடியாக, மதப்பேய்களே! மதம்பிடித்து ஆடிக்கொள்ளுங்கள் உங்களுக்குள்ளேயே, பணத்துக்காக குண்டை சுமக்கும் சைக்கோக்களே! பணத்துக்கு விலை அப்பாவிகளின் உயிர் அல்ல.


அடுத்த பதிப்பில் ( யார் இந்த சுயநல அரசியல்வாதிகள், இயேசுவும், நபிகளும், கிருஷ்ணரும் செய்த தவறு என்ன?)
தொடர்புக்கு... arivakam@gmail.com

No comments:

Post a Comment