அறிவகம் புதிய இணையதளம்

Thursday, June 27, 2019

காலம் என்பது என்ன? -Time travel 5

நேற்று இன்று நாளை இது தான் எதார்த்தமாக நாம் அறியும் காலம். இரவும் பகலும் மாறிமாறி வருவதை வைத்து நேற்று, இன்று, நாளையை கணக்கிடுகிறோம். பருவநிலை மாற்றத்தை வைத்து வருடத்தை கணிக்கிறோம். பிறப்பு, இறப்பை வைத்து தலைமுறையை கணிக்கிறோம்.

பிறப்பு, இறப்பு என்பதுதான் காலம் நமக்கு மிக முக்கியம் என்பதை உணர்த்துகிறது. பிறப்பு இறப்பு என்ற ஒன்று இல்லை என்றால் காலத்தை பற்றி யாரும் பெரிதாக கவலைப்படப் போவதில்லை.


பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழும் காலம். இந்த காலத்தில் திட்டமிட்டு பயணிக்கவே கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளோம். காலம் என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது கடிகாரம். உலகளாவிய அறிஞர்கள் ஒன்று சேர்ந்து உலக பொது கடிகாரத்தை உண்டாக்கி உள்ளனர். அந்த கடிகார இயக்கத்தின் மீச்சிறு அளவு தான் விநாடி. 60விநாடிகாள் ஒரு நிமிடம். 60 நிமிடம் ஒரு மணி நேரம். 24 மணிநேரம் ஒருநாள். இது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.

சரி இந்த கடிகாரம் தான் காலத்தின் அளவீடா என்றால், இல்லை என்பது தான் பதில். கடிகாரம் காலத்தை அளக்க பயன்படுத்தும் கருவிகளுள் ஒன்று. நமது சராசரி வாழ்க்கையில் இந்த கடிகாரத்தை பயன்படுத்துகிறோம். அணுவியல் அறிவியலாளர்கள் அணு கடிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். வானியல் அறிஞர்கள் ஒளி கடிகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

ஒளி ஒருவருடத்தில் செல்லும் தூரம் ஒளிவருடம் எனப்படும். ஒளிவருடம் பற்றி யோசித்தால் தலை சுற்றி விடும். வேண்டுமானால் பரிசோதித்து பாருங்கள். ஒளி ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணிக்கும். அப்படியானால் ஒரு மணி நேரம், ஒரு நாள் ஒரு வருடம் எவ்வளவு கிலோமீட்டர் பயணிக்கும் என்பதை சும்மா கணக்கு போட்டு பாருங்கள். இந்த தலையை சுற்றும் கணக்குகள் எல்லாம் நமக்கு வேண்டாம்.

அதே போலத் தான் அணு கடிகாரம். அணுவில் நிகழும் எலக்ட்ரான் சுழற்சி அணு கடிகாரத்தை நிர்ணயிக்கிறது. அணுவுள் ஒளித்துகள் எனப்படும் போட்டான் மின்காந்த அலைகளாக இயங்குகிறது. இந்த மின்காந்த அலைகளின் அதிர்வெண் அணுகடிகாரத்தின் மீச்சிறு அளவாக கொள்ளப்படுகிறது. இந்த அளவை கேட்டால் மறுபடியும் தலைசுற்றும். உதாரணமாக ஒரு நொடியில் ஒருலட்சம் பங்கு காலம். ஒருநொடியை ஒருலட்சத்தால் வகுத்தால் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஆனால் இது எல்லாவற்றையும் சாத்தியமாக்கி இருக்கிறது அறிவியல். அறிவியல் தரும் அந்த அற்புத நம்பிக்கையில் தான் நாம் கால இயந்திரத்தை கட்டமைக்க துணிந்துள்ளோம்.

இயல்பான கடிகாரம், ஒளிகடிகாரம், அணுகடிகாரம் இந்த மூன்றுமே அடிப்படையில் சுழல் என்ற ஒற்றை தத்துவத்தில் தான் இயங்குகிறது. துவக்கம்-முடிவு என்ற சுழல் இயக்கம் தான் காலமாக கொள்ளப்படுகிறது.  துவக்கமும் முடிவும் உள்ள எந்த இயக்கத்தையும் காலமாக கொள்ளலாம். காலம் என்பது ஒரு அளவீடு தானே தவிர, காலம் என ஒன்று இல்லை. இயக்கத்தை அளக்க காலம் என்ற அளவீட்டை பயன்படுத்துகிறோம்.

துவக்கம்-முடிவு என்ற சுழல் தான் காலத்தின் அடிப்படை இயக்கம். நிலையாக இருக்கும் எதற்கும் காலம் இல்லை. அதே போல நிலையற்று இருக்கும் எதற்கும் காலம் இல்லை. இரண்டும் மாறி மாறி வரும் எதற்கும் காலம் இருக்கிறது.

நமது உடல் பிறக்கிறது, வளர்கிறது, இறக்கிறது. இந்த இயக்க சுற்றை வாழ்க்கை காலம் என்கிறோம். இங்கு தான் அந்த சுவாரசிய கேள்வி பிறக்கிறது. நாம் பிறக்கிறோம், வளர்கிறோம், இறக்கிறோம் என்பது காலம் என்றால், நாம் மீண்டும் பிறப்போமா?

ஆம் என்ற அற்புத பதிலில் சித்தர்களின் காலப்பயணம் தொடர்கிறது. இல்லை என்ற கசப்பு மருந்தில் அறிவியலின் காலப்பயணம் முடிகிறது.

அறிவு பயணம் தொடரும்...
முந்தைய கட்டுரைகளை படிக்க www.arivakam.org

No comments:

Post a Comment