அறிவகம் புதிய இணையதளம்

Tuesday, September 9, 2008

பொருள் அறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும் (உலகின் அவசரத்தேவை-13)

அனைவருக்கும் அறிவகத்தின் ஓணம் நல்வாழ்த்துக்கள்...

சென்ற பதிவில் நமக்குள் எழுந்த கேள்விகள் 1. நிலை என்றால் என்ன? அடிப்படை(ஆரம்ப) ஆற்றல் என்ன? இங்கு அது குறித்து பார்ப்போம்

நிலை என்பதை தான் அறிவு என்கிறோம். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, மொத்தநிலை என சொல்கிறோம் அல்லவா? அதே அர்த்தத்தில் தான் இங்கு நிலையையும் குறிப்பிடப்படுகிறது.

பிரபஞ்ச அடிப்படையில இரண்டே நிலைகள் தான் 1, அறிநிலை. 2. அறியா நிலை. அறிநிலையை பொருள் என்கிறோம். அறியா நிலையை வெளி என்றோம். பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம். அந்த இயக்கத்தின் தொடர்ச்சி ஆற்றல். அந்த ஆற்றல்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு அறிவு.

உதாரணமாக நாம் மூளையில் அறிவு பதிவதை எடுத்துக்கொள்வோம். நம் மூளையில் உடல் இயக்கத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு பதிகிறது. இந்த நினைவுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஒருங்கிணைந்த நிலையிலேயே பதிகின்றன. அதாவது நமது மனதுள் ஏற்கனவே பதிந்துள்ள ஒரு நினைவை தொடர்புபடுத்தியே அடுத்த நினைவு பதிகிறது.

ஒரு குழந்தை புதிதாக ஒரு கழுகை பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் அது நம்மிடம் சொல்லும்போது அது காக்கா மாதிரி இருந்தது. அது மாதிரி இருந்தது இதுமாதிரி இருந்தது என்றெ சொல்கிறது. அதே அடிப்படையில் தான் நினைவும் பதிகிறது. நான், என் அம்மா, என் அப்பா எனது எனது என்று தனக்கு தொடர்புடைய ஒவ்வொன்றாகவே நினைவில் பதிகிறது. அதே தத்துவம் தான் பிரபஞ்சத்தின் அத்துனை அறிவிலும் இருக்கிறது.

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஆற்றல்களின் கோர்வை(கட்டமைப்பு) அறிவு எனப்படுகிறது.

அறிவு என்றால் மனிதனுள் இருக்கும் நினைவு மட்டுமே அல்ல. இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நினைவு, சிந்தனை, இவையெல்லாம் மனிதனுள் இருக்கும் குறிப்பிட்ட சில அறிவுகள் அவ்வளவே.

அறிவு என்பது ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு. இது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். (மேலும் விரிவான விளக்கங்களை காலம் பகுதியில் பார்க்கலாம்.)

அடுத்து பொருள்அறிவு குறித்து பார்ப்போம்

மனிதர்களாகிய நாம் பொருளை மட்டுமே அறியும் ஆற்றல்களை பெற்றுள்ளோம். வெளியின் இயக்கங்கள் எதையும் நமது அறிவு அறிவதில்லை. இரு பொருட்களை அறியும் நமக்கு, இரு பொருட்களுக்கும் உள்ள இடைவெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடிவதில்லை.

பொருட்களை மட்டுமே அறியும் அறிவுத்தொகுப்பு பொருள்அறிவு எனப்படுகிறது.

பொருள் அறிவு பொதுவாக மனிதனுள் இயல்பறிவு, கருவியறிவு என்ற இரண்டு நிலைகளில் சாத்தியப்படுகிறது.

இயல்பறிவு என்பது மனிதன் உடல்உறுப்புகள் வழியாக நேரடியாக பொருளை உணர்ந்து கொள்ளும் அறிவு. கருவியறிவு என்பது கருவிகளின் உதவியுடன் மனிதன் பொருளை அறிந்து கொள்ளும் அறிவு.

உதாரணமாக: கல்லை நம்மால் நேரடியாக அறியமுடியும். ஆனால் கல்லின் அணுக்களை அறியமுடியாது. அதேநேரத்தில் எலக்ட்ரான் நுண்ணோக்கி என்ற கருவியை பயன்படுத்தி நம்மால் கல்லின் அணுக்களை அறிய முடியும். இதேபோல தான் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி, ஒலி, வெப்பம், நிறை, மின், வேதி, என எல்லாவகை ஆற்றலிலும் குறிப்பிட்ட தன்மைகளை (நிலைகளை) மட்டுமே நம்மால் இயல்பாகவும், கருவி உதவியுடனும் அறியமுடியும்.

குறிப்பிட்ட ஒளிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (கண்ணுரு ஒளி)
குறிப்பிட்ட ஒலிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (10 முதல் 20 டெசிபல் வரை)
குறிப்பிட்ட நிறையை மட்டுமே நாம் அறிகிறோம் ( )
குறிப்பிட்ட வெப்பத்தை மட்டுமே நாம் அறிகிறோம் ( )
குறிப்பிட்ட ஆற்றல்களை மட்டுமே நாம் அறிகிறோம் (ஒளி, வெப்பம், நிறை, மின்)
குறிப்பிட்ட இயக்கங்களை மட்டுமே நாம் அறிகிறோம் (இடம்ப்பெயர்ச்சி, சுழல்)
குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே நாம் அறிகிறோம்(நிலம்,நீர்,நெருப்பு,வாயு,வான்)

பிரபஞ்சத்தில் நிலவும் வெளியை நம்மால் அறியமுடியாது. ஏனெனில் அவற்றை அறிவதற்கான அறிவு நம்மிடம் இல்லை. ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள பொருள் அனைத்தையும் நம்மால் அறியமுடியும். (இங்கு பொருள் என குறிப்பிடப்படுவது திட, திரவ நிலையில் உள்ள பொருட்களை மட்டுமல்ல, காற்று, அலை, பிளாஸ்மா, அணுத்துகள் போன்ற நமது இயல்பறிவால் அறியமுடியாத பொருளையும் உள்ளடக்கிய மொத்தத்தையும் குறிப்பிடுவதே பொருள்)

பொருள் அறிவு, இயல்பறிவு, கருவியறிவு இவை புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்து பொருள் அறிவுக்கு அப்பாற்பட்ட அறிவு குறித்து பார்ப்போம்.

பிரபஞ்ச பொருளை நம்மால் எளிதில் அறியமுடிவது போல வெளியை அறியமுடிவதில்லை. வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாவிட்டாலும், எதுவுமே இல்லாத நிலையை அறியும்அறிவு மட்டும் நம்மிடம் உள்ளது. வெளியை பொருத்தவரை நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு எதுவுமேஇல்லை என்பது மட்டுமே.

பொருளை தாண்டிய வெளியை அறியும் அறிவை தான், பொருள்றிவுக்கு அப்பாற்பட்ட அறிவு என்கிறோம். வெளியில் என்ன இருக்கிறது? என்ன நிகழ்கிறது? அதன் இயக்க என்ன? என்பதை அறிந்துகொள்ளும் அறிவு வெளியறிவு. அனால் பொருளறிவில் கட்டப்பட்டுள்ள நமக்கு அது சாத்தியப்படாது. ஒன்று பொருளை அறியமுடியும் அல்லது வெளியை அறியமுடியும். இந்த இரண்டையும் ஒரே கணத்தில் அறிய முடியாது. அதாவது ஆன்(on) அல்லது ஆப்(off). இந்த ஆன்(on) ஆப்(off) நிலைகளை ஒரே காலத்தில்(நொடியில்) அறிய முடியாது.

இங்கு ஒரு ஐயம் வரலாம். அப்படியானால் பொருளை ஒதுக்கி வெளியில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் ஒரு கணத்தில் அறிய முடியும் தானே.

இப்படி சிந்தித்த சித்தர்கள் பொருளை ஒதுக்கி(இது மனிதனில் அவ்வளவு எளிதானது அல்ல) வெளியை மட்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களால் வெளியின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள முடிந்ததே தவிர அதை பொருளறிவில் விளக்க முடியிவில்லை. விளக்கவும் முடியாது. ஏனெனில் அப்படி விளக்க நினைக்கும்போதே அங்கு பொருளறிவு வந்துவிடுகிறது.

சில ஆன்மீகவாதிகள் பொருளறிவை விட வெளியறிவு சிறந்தது. மேலானது, உன்னதமானது, தெய்வீகமானது எனவெல்லாம் சொல்வது சுத்த பொய், மூடத்தனம். உண்மையில் பொருளறிவும் வெளியறிவும் சமபலம் வாய்ந்ததே. இதை நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு இயக்கத்துக்கும் அதற்கு இணையான எதிர்இயக்கம் உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. பொருளுக்கு நேர்எதிர் அறிவை(நிலையை) உடையதே வெளி. எனவே பொருளும் வெளியும் தன்மையிலும் மேன்மையிலும் இணையானதே தவிர ஒன்றை விட ஒனறு மேன்மையானது அல்ல.

இந்த பதிவின் சுருக்கம்:

1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள்
2. மையமும் எல்லையும் இல்லாத நிலை வெளி
3. பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம்.
4. ஒரு இயக்கம் மற்ற(வேறொரு) இயக்கத்தை ஏற்படுத்துமானால் ஏற்பட்ட இயக்கத்துக்கு ஏற்படுத்தும் இயக்கம் ஆற்றல்.
5. ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு அறிவு.
6. மையமும் எல்லையும் உள்ள ஆற்றல்கட்டமைப்பு(அறிவு) பொருளாக கொள்ளப்படுகிறது.
7. பொருளை மட்டும் அறியும் அறிவு பொருளறிவு, பொருளுக்கு அப்பாற்பட்ட வெளியை அறியும் அறிவு வெளி அறிவு.

இப்போதும் நமக்கு முன் வந்து நிற்கும் கேள்விகள்

1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள் என்பது சரி. அந்த நிலையில் பொருளாக என்ன இருக்கிறது?
2. முதல் நிலை பொருளில் இருக்கும் முதல்அறிவு என்ன? அல்லது ஆரம்ப ஆற்றல் எது?
3. பொருளும் ஆற்றலும் எப்படி வந்தது? எப்படி பிரபஞ்சமாக வியாபித்தது?

இந்த கேள்விக்கு விடைதேடும் முன்னர் காலம் குறித்து கொஞ்சம் விளக்கிக்கொள்ளலாம்

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்.... ( மாயை என்பது என்ன? காலம் எப்படி வந்தது? காலத்தை திரும்ப சுற்ற முடியமா?)

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... arivakam@gmail.com

3 comments:

  1. நல்ல தொடர்...
    தொடர்ந்து படிக்க முயற்சிக்கிறேன்.

    நன்றி..

    ReplyDelete
  2. Quantum Physics பற்றி பொளந்து கட்டுகிறீர்கள் தாயே.

    வெகு நாட்களாக இதுபோல் தமிழில் எவராவது எழுத மாட்டார்களா என ஏங்கியிருந்தேன்.

    நன்றி.!
    நன்றி..!

    தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //தொடர்ச்சி அடுத்த பதிப்பில்.... ( மாயை என்பது என்ன? காலம் எப்படி வந்தது? காலத்தை திரும்ப சுற்ற முடியமா?)//

    படிப்பதற்கு ஆவலோடு இருக்கிறேன்.

    எனக்கு தெரிந்தது.

    பேட்டரி தீராவே தீராத கடிகாரம் போன்றது தான் காலம், முன்னோக்கிய சுழலும். எதிர்பக்காமாக செல்லாது. நடந்தவைகளே திரும்ப நடக்கும், பழைய சுழற்சியின் தடங்கள் முற்றிலும் மறைந்துவிட்ட படியால் அது சுழல்கிறது என்பதையே நம்மால் உணர முடியாது.

    ReplyDelete